Skip to content

angkayarka

ஜனவரி 1, 2007

.
ஓம்.
அங்கயற்கண் அருள் நாயகி மதுரை மீனாட்சி
சீராரும் பூங்கமலத் தெள்ளமுதே சேயிழையே
காராரு மேவிக் கருங்குயிலே ஆராயும்
வேதமுத லாகிநின்ற மெய்ப்பொருளே மின்னொளியே
ஆதிபரா பரையே அம்பிகையே சந்ததமும்
நீயே துணையாகி நின்றிரட்சி
அங்கயற்கண் தாயே சரணஞ் சரணம்.

திருப்போரூர் ஸ்ரீ சிதம்பர சாமிகள்
ஔம்

ஓம்

ஆதிசக்தியின் அங்கயற்கண் அலர்ந்ததால் உயிர்கள் உருக்கொண்டன. மலர்ந்த கண், மூடி மொட்டாகிவிட்டால் உலகும் உயிர்களும் உருத்தெரியாமல் அழிந்துவிடும் என்பதாலேயே அங்கயற்கண்ணி அன்றலர்ந்த கண்களை ஒருபோதும் இமைக்கமல் இவ்வுலகைக் கட்டிக் காத்து வருகிறாள்.

இம்மையில் இருக்கும் மாந்தரை இமைப்பொழுதும் கண் துஞ்சாமல் காத்தருளும் அங்கயர்கண்ணி மீனாட்சி அருளாட்சி புரியும் அற்புதத் தலம்….மதுரை.

அன்னை தென்மதுரையைத் தேர்ந்தெடுத்தது எதற்காக?

அரசு என்றால் எப்படி அமைய வேண்டும் என ஆட்சியாளர்களுக்கு அறுதியிட்டுக் காட்டுவதற்கு ஆசைப்பட்டாள் உமையவள்.
ஆலவாய் என அழைக்கப்படும் அழகிய மதுரையை மேன்மையுடன் ஆண்டுவந்த மலையத்துவச பாண்டியன், மகப்பேறு வேண்டி தன் மனைவி காஞ்சனமாலையுடன் ஒரு புத்திரகாமேட்டி யாகத்தை நடத்தினான்.வேள் வித் தீயிலிருந்து ஒரு குழந்தையின் குரல் ‘அம்மா. அப்பா..’ எனக்கூவி அழைத்தது.

குண்டத்து நெருப்பில். குழந்தையா?

ஆச்சரிய அற்புத அனுபவங்களைக் கடந்து அரசனைத் திகில் தீண்டியது. அக்கணமே யாக நெருப்பில் ஊடுறுவி, அந்தக் குழந்தையை அள்ளி எடுத்து அரசியின் மடி மீது கிடத்தினான்.

அது ஒரு பெண் குழந்தை என்பதையும், அதன் நெஞ்சில் வித்தியாசமாக மூன்று மார்புகள் முகிழ்ந்திருந்ததையும் கண்டான்.

அரசன் குழந்தையை இரு கைகளிலும் ஏந்தி எழுந்து நின்றான் “அம்மையே, இது என்ன சோதனை? பச்சிளம் பாலகிக்கு எதற்காக மூன்று முத்துக்கள்?” எனக் கதறினான்.

ஆகாச வெளியிலிருந்து அசரீரி ஒலித்தது.

“மலையத்துவசனே, மனம் மயங்காதே.. இந்த அங்கயற்கண்ணி அழகுறத் திகழ்வாள். கரம் பிடிக்க இருக்கும் கணவனைக் கண்டவுடன் இவள் நெஞ்சில் கிளத்திருக்கும் மூன்றாவது மொட்டு தானாகவே மாயமாகிவிடும்.”

மலையத்துவசன் மனம் தெளிந்தான். தங்களுக்குக் கிடைத்த அந்த அருள் பொக்கிஷத்துக்கு தடாதகை எனப் பெயரிட்டான். மீன் போன்ற விழிகளைக் கொண்டிருந்ததால் கயற்கண்ணி எனவும், மீனாட்சி எனவும் அவள் அழைக்கப்பட்டள்.

உரிய காலத்தில் பாலகி அங்கயற்கண்ணி பருவம் எய்தினாள். மன்னன் மலையத்துவசனுக்குப் பின் அரசுக் கட்டிலில் அமர்ந்தாள். அன்றிலிருந்து அவள் மதுரை மீனாட்சி என்று அழைக்கப்பட்டாள்.

அவளை எதிர்த்த அரசர்கள் அத்தனை
பேரும் மண்ணைக் கவ்வினர். அன்னையின் திருவுளப்படி ஆட்சி புரிந்தனர். செருக்கு எங்கு தலை தூக்கினாலும், அது சடுதியில் ஒழிக்கப்பட்டது. நீள்விழியாளால் நீதி மீட்கப்பட்டது.நெறி பிழைத்தது மக்கள் மனம் மகிழ்ந்தனர்.

அங்கயற் கண்ணி கைலாயத்தையும் கைப்பற்ற விழைந்தாள். கன்னியின் படை கலகலப்புடன் கைலாயத்தை அடைந்தது. கைலாய நாதன் தன் கணங்களோடு கன்னியை எதிர்க்க வெஞ்சமர்க்களம் வந்து சேர்ந்தான்.

அரையில் யானைத்தோல் அணிந்து, அரவம் ஊர்ந்திடும் உடம்புடன், சடை முடிதரித்து சமருக்கு வந்தவனைக் கண்டதும் அங்கயற்கண்ணியின் மூன்று மார்பகங்களில் ஒன்று மாயமாகிப் போனது.

தடாதகைப் பிராட்டிக்குத் தான் யார் என்பது அப்போதுதான் புரிந்தது. தன் கைத்தலம் பற்றப் போகிறவன் கைலாயநாதன் தான் என்பதை உணர்ந்த அவள் நாணம் மேலிட தரை பார்த்து தலைசரித்தாள்.

“அங்கயற்கண்ணியே1 ஆலவாய் வந்து உன்னை மணக்கிறேன்” என்று ஈசன் இயம்பினான். போருக்குச் சென்ற கன்னி, பொங்கும் காதலுடன் நாடு திரும்பினாள். தன் கிளியைத் தூதாக அனுப்பினாள்.

மதுரையில் மண விழா!

காதல் கொண்ட கன்னியைக் கலயாணத்திற்கு முன்பே பார்த்து ரசிக்க, கைலாய நாதன் கடம்பவனத்தில் ஒரு சுயம்புவாய் எழுந்தருளினான். பிரம்ம தேவன் நடத்திவைக்க திருமால், திருமகளின் கைத்தலத்தைக் கைலாயநாதனிடம் பற்றித் தர, யோகநாதன் மலைமகள் கழுத்தினில் மங்கலநாணைப் பூட்டிப் போகநாதனாக மாறினான்.

அங்கயற்கணியை மணந்தவுடன் ஈசனிடம் இருந்த ரிஷபக்கொடி மீன் கொடியாக மாறியது. பாம்புகள் பரிதிக் கதிராய்ச் சுடர்விடும் அணிகலங்களாயின. கொன்றை மாலை வேப்பம் பூ மாலையாயிற்று. இடுப்புத் தோலுடை பீதாம்பரம் ஆனது. சடைச் சந்திரன் வைர முடியாக மாறியது. கைலாய நாதன் சுந்தரபாண்டியனாக மாறினான். அவனுடைய கணங்கள் யாவும் மானுட வடிவம் கொண்டன. காதல் தூது சென்ற கிளி தடாதகையின் தோளில் தொற்றிக்கொண்டது.

ஈசன், சுந்தர பாண்டியனாகவும், ஈச்வரி மீனாட்சியாகவும் அரசுக் கட்டிலில் அமர்ந்து ஆட்சிபுரியத் தொடங்கினர்.

மதுரைக் கோயிலுக்கு வரும் பகதர்கள் எல்லாம் முதலில் கிளி கொஞ்சும் மீனட்சியைத் தரிசித்துவிட்டே சோமசுந்தரர் சந்நிதியை நாடுவர். மீனாட்சி சந்நிதிக்கு முன்பாக பொற்றாமரைக் குளம் இருக்கிறது. இந்தக் குளத்தில் மலர்ந்த பொற்றாமரையைக் கொண்டு ஈசனை இந்திரன் வழிபட்டதால் குளத்துக்கு பொற்றாமரைக் குளம் என்ற பெயர் நிலைத்தது. இக்குளக்கரையில் ஒரு நாரைக்கு நற்கதி அளித்தான் ஈசன். அன்றுமுதல், பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் உட்பட எந்த நீர்வாழ் உயிரினமும் கிடையாது என ஈசன் விதித்தான். இந்தக் குளத்தில் தான் திருவள்ளுவரின் திருக்குறளை அங்கீகரித்து சங்கப் பலகை மிதந்தது. பொற்றாமரைக் குளத்துக்கு ஆதி தீர்த்தம் என்றும், முக்தி தீர்த்தம் என்றும் சிவ கங்கை எனவும் உத்தம தீர்த்தம் என்றும் பல பெயர்கள் உண்டு.

அன்னையின் சந்நிதிக்கு வலதுபுறத்தில் விநாயகரும், இடது புறத்தில் முத்துக் குமாரசாமியும் கோயில் கொண்டுள்ளாகள். பிள்ளைகளை வணங்கிவிட்டு அன்னையின் முன் நின்று கண் முடி, கைகூப்பி நின்று அகிலாண் டேஸ்வரியை அகத்தில் வணங்கிக் கண் திறந்தால் அடடா.. என்னவொரு அற்புதமான தரிசனம்!

அன்னை மீனாட்சி நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். அவள் திருமேனியைப் பிரமிப்பூட்டும் ஆபரணங்கள் அலங்கரிக்கின்றன. உயர்த்திய வலதுகையில் பூச்செண்டின் மீது வீற்று அன்னையை அனவரதமும் கொஞ்சும் பச்சைக்கிளி. தாழ்ந்த இடதுகை, வளைந்த இடுப்பை உரசித்தாண்டி அவள் திருப்பாதங்களில் பணியத்தூண்டும். அன்னை மீனாட்சி ஒரு அருளழகுப் பெட்டகம். அவளுடைய வசீகரமான திருவிழிகள் தாய்மீனைப் போல் குழந்தைகள் மீது எல்லையற்ற கருணையைப் பொழிகின்றன. அந்தக் கருணை முகத்தைக் கண்ணுற்றதும், காலம் காலமாக சேர்த்து வந்த கவலையெல்லாம் கரைந்தோடும். அன்னையின் சந்நிதியிலிருந்து வடக்குப் பக்கம் சுவாமியின் சந்நிதிக்குப் போகும் வழியில் முக்குறுணிப் பிள்ளையார் அமர்ந்திருக்கிறார்.

கம்பத்தடி மண்டபம் என அழைக்கப்படும் மண்டபத்தில் நந்தியும், கொடிக்கம்பமும் அழகுற அமைந்துள்ளன. இதற்கு எதிரே உள்ள சந்நிதியில் சொக்கலிங்கப் பெருமான் என்றும் சோமசுந்தரர் என்றும் அழைக்கப்படும் ஈசன் லிங்கவடிவில் எழுந்தருளியுள்ளார். ஈசனின் திருவிளையாடல்கள் அறுபத்துநான்கும் இங்குத்தான் அரங்கேரியுள்ளன. ஈசன் எழுந்தருளியிருக்கும் கருவறை விமானம் இந்திரனால் வழங்கப்பட்டது. எட்டு கல்யானைகளும், முப்பத்திரண்டு சிங்கங்களும், அறுபத்து நான்கு சிவ கணங்களும் தாங்கும் இந்தக் கருவறை போல வேறு எந்தக் கோயில் கருவறையும் இல்லாதது இந்தக் கோயிலின் தனிச்சிறப்பு. ஈசனின் பிரகாரத்தில் இடப்புறம் அமைந்திருக்கும் ஸ்ரீதுர்க்கை காண்போரை மயக்கும் மோகனச் சிரிப்பைக்கொண்டவள். சக்திவாய்ந்தவள்

நடராஜரின் கூத்தில் கால் மாற்றி ஆடிய வெள்ளி அம்பலம் மதுரை மீனாட்சி கோயிலில் தான் உள்ளது. நடராஜருக்கு எதிர் நடனம் ஆடிய பத்திர காளிக்கு ஒரு பிரம்மாண்டமான சிற்பம் சுவாமி சந்நிதிக்கு எதிரில் அமைந்துள்ளது. அற்புதமான வேலைப்பாடுகள் நிரம்பிய அகோர வீரபத்திரர் சிற்பமும், பத்திரகாளி சிற்பத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளது, தவிர, அக்கினி வீரபத்திரர், ஊர்த்த்துவ தாண்டவர் சிற்பங்களும் இருவேறு பெருந்தூண்களில் செதுக்கப்பட்டு காண்பவர் கண்களைக் கவர்கின்ரன.

ஆயிரங்கால் மண்டபமும், அதனுளமைந்திருக்கும் அருங்காட்சியகமும், சிற்ப வேலைப்பாடுகளுக்கு மிக்கப் புகழ்பெற்றவை. பார்ப்பவர்களுக்கு பிரமிப்பு ஏற்படுத்தும் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த மதுரைக் கோயில், நான்கு பெரிய கோபுரங்களையும், எட்டு சிறிய விமானங்களையும் கொண்டது. அன்னைக்கே திருமணம் நடந்த தலம் என்பதால் திருமணத்துக்குக் காத்திருக்கும் கன்னிப் பெண்களுக்கும் மதுரை மீனாட்சியின் அருள் தப்பாமல் உண்டு. ஆலவாய் என்ற பெயரைக் கேட்டாலே முக்தியடையும் என்ற சிறப்பு இந்தக் கோயிலுக்கு மட்டுமே உண்டு.”அங்கயற்கண்ணி என ஒரு காதில் ஓதின், துயர்கெடும், பகை மாளும், தொலையாத செல்வம் உண்டாகும், சொர்க்கமும் எளிதாம்” என்கிறது திருவிளையாடல் புராணம். ஆலவாய் அழகியை அனுதினமும் தொழுவோம்; அவள் அருளாட்சி மழையில் நனைவோம்.
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
நன்றி: திரு காஷ்யபன் எழுதிய கட்டுரையிலிருந்து.
அன்புடன் வாழ்த்துகள், அன்பன் வெ.சுப்பிரமணியன் ஓம். .

ஓம்
ஔம்

.

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: