Skip to content

பூம்புகாரில் வரலாற்றுப் புதையல்

ஜூன் 2, 2008

பூமிக்குள் புதையல் கிடைக்கலாம். ஆனால் ஒரு மாநகரமே வரலாற்றுப் புதையலாய் கடலோரத்தில் புதைந்து கிடக்கிறது.

பாடிய பட்டினப்பாலை இருக்கிறது. பாடப்பட்ட பட்டினம் கடலுக்குள் பாலையாய்க் கிடக்கிறது.

புதைந்து கிடப்பது ஒரு பட்டினம் மட்டுமல்ல. தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றின் தொன்மையும்கூட.

தமிழ் வளர்ச்சித் துறை சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள ஊர்களைப் பட்டியலிட்டு, அவை தற்போது எந்தெந்த மாவட்டங்களில் எப்படி இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து ஆவணப்படுத்த “ஊரும் சீரும்” எனும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

ஊரும் சீரும் திட்டத்தில் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டது பூம்புகார். பூம்புகாரை ஆவணப்படமாக்கும் திட்டச் செயற்பாட்டின் போதுதான் (இப்பணியில் சென்னை ஓவியக்கல்லூரி முதல்வர் திரு.சந்துரு, இயக்குநர் திரு.சீனிவாசன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்) பூம்புகாருக்கு அருகில் உள்ள மேலப் பெரும்பள்ளத்தில் ஒரு முதுமக்கள் தாழி கிடைத்தது.

பூம்புகாரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி

முதுமக்கள் தாழி – இறந்தவர்களையும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் வைத்து பூமிக்குள் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட பெரிய சால் ஆகும். புறநானூறு “கலம் செய்கோவே” என்று முதுமக்கள் தாழி பற்றிய குறிப்பைத் தருகிறது.

தமிழ் இலக்கியங்களில் மட்டுமன்றி, பிராகிருத மொழியில் உள்ள புத்த ஜாதகக் கதைகளும் புத்தவம்சகதாவும், தாலமியின் பூகோளநூல் போன்ற வெளிநாட்டார் நூல்களும் பூம்புகாரைக் குறிப்பிடுகின்றன.

செம்பியன்,
மனுநீதி சோழன்,
கரிகாலன்,
கிள்ளிவளவன்

காலங்களில் பூம்புகார் துறைமுகத் தலைநகராக இருந்திருக்கிறது. பத்துப்பாட்டில் ஒன்றாகிய பட்டினப்பாலை இவ்வூரைப்பற்றி பாடுகிறது.

மகதம்,
அவந்தி,
மராட்டா

நாட்டுக் கைவினைக் கலைஞர்களின் தொழிற்கூடமாகவும் பூம்புகார் இருந்திருக்கிறது.

இலக்கியச் சான்றுகளை உறுதிப்படுத்தும் தொல்லியல் ஆதாரங்களும் பூம்புகாரில் கிடைத்துள்ளன. மத்திய தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை ஆகியவை ஆய்வு மேற்கொண்டு சங்ககாலப்

படகுத்துறை,
புத்தர்விகாரை,
உறைகிணறுகள்,
அரிய மணிகள்,
கட்டடங்கள்,
காசுகள்

ஆகியவற்றைக் கண்டுபிடித்துத் தந்துள்ளன.

தமிழக முதல்வர் வழங்கிய ஆதரவைக்கொண்டு ஏற்கெனவே கோவா ஆழ்கடல் அகழாய்வு மையம் பூம்புகாரில் நடத்திய ஆய்வில் கடலுக்குள்ளிருக்கும் கறுப்பு,சிவப்புப் பானை ஓடுகள் கட்டடப் பகுதிகள், நகர்ப் பகுதிகளைக் கண்டறிந்துள்ளது. ஆனால் தற்போது கிடைத்துள்ள முதுமக்கள் தாழி, தனிச் சிறப்பிற்கு உரியதாகும்.

பெரிய தாழியில் பத்துக்கும் மேற்ப்பட்ட சிறுசிறு கலயங்கள் கிடைத்துள்ளன. இதுவரை கிடைத்த முதுமக்கள் தாழிகளைவிடப் பெரிய அளவிலும் உடையாத கலயங்களும் தற்போது கிடைத்துள்ளன.

கறுப்பு சிவப்பு கலயத்தில் எழுத்துப் பொறிப்புடன் கிடைத்துள்ள முதல் கலயம் இதுதான். குறியீடுகளோடு பூம்புகாரில் இதுவரை கறுப்பு சிவப்புக் கலயம் ஏதும் கிடைக்கவில்லை. இதில் கழுத்துப் பகுதியில் கோட்டிற்குமேலே பாய்மரப் படகும் மீனும் பொறிப்புகளாக உள்ளன. இது 21 செ.மீ உயரமும் 10 செ.மீ. வாய்ப்பகுதி அகலமும் கொண்டுள்ளது.

பூம்புகாருக்கு அருகில் வானகிரி கோசக்குளத்தில்,1997-98-ல் எழுத்து பொறிக்கப்பட்டிருந்த பானை ஓடு கிடைத்துள்ளது. ஆனால் அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை இன்றுவரை ஆய்வாளர்கள் ஏற்கும் வகையில் உறுதிப்படுத்த முடியவில்லை. செம்பியன் கண்டியூர் அய்யனார் கோயிலில் கிடைத்துள்ள கறுப்புநிற பானையின் கழுத்துப் பகுதியில் இரண்டு அம்புக்குறியீடுகள் மட்டும் உள்ளன. இதே ஊரில் கிடைத்த கல்கத்தி அல்லது கல்கோடாரியில் சிந்துவெளிக் குறியீடுகள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கல்கத்தியின் காலம் குறைந்தது மூவாயிரம் ஆண்டுக்கும் முற்பட்டது என்று தொல்லியல் அறிஞர்கள் உறுதி செய்துள்ளனர்.

தற்போது கிடைத்துள்ள ஆதாரம் பலவகைகளில் குறிப்பிடத்தக்கது. கறுப்பு சிவப்பு நிறம் என்பது கி.மு.5ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தைக் காட்டுகிறது. கறுப்பு சிவப்பு நிறப்பானை சமதரையில் கிடைக்காமல் முதுமக்கள் தாழியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. முதுமக்கள் தாழியின் காலம் பெருங்கற்காலம். பெருங்கற்காலம் கி.மு.1000-லிருந்து கி.மு.3000 வரையிலான காலத்தைச் சேர்ந்தது. மேலும் உறை கிணறு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பட்டினப்பாலை, “உறைகிணற்றுப் புறசேரி” (வரி 27)யைப் பற்றி குறிப்பிடுகிறது.

கிணறுகள் பலவகை.

கடலுக்கு அருகில் அமைக்கப்பட்ட கிணறு ஆழிக்கிணறு;
ஒழுங்கமைவு இல்லாத கிணறு கூவம்;
ஆற்றுமணலில் தோண்டுவது தொடுகிணறு;
ஏரியின் நடுவில் உள்ள கிணறு பிள்ளைக் கிணறு;
பூட்டை உருளை கொண்டு கமலை நீர் பாய்ச்சத் தோண்டிய கிணறு பூட்டைக் கிணறு.
இவ்வரிசையில் மேலும் ஒரு கிணறு உறை கிணறு.

பூம்புகாரில் கடலோரத்தில் வானகிரியில் உறைகிணறு ஒன்றும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. கடற்கரை மணலில் குடிநீருக்காக தோண்டப்படுகின்ற கிணறுகள் மண் சரிந்து தூர்ந்து போகாமல் இருக்க கட்ட மண் வளையங்கள் கொண்டு உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

கொற்கை, நந்தன் மேடு, அரிக்க மேடு ஆகிய பகுதிகளில் உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூம்புகாரின் கடற்கரையில் விழா நடைபெற்றபோது மக்கள் கூடியிருந்த செய்தியை உறைகிணறு உறுதிப்படுத்துகிறது.

குறியீடுகளோடு கறுப்பு சிவப்பு நிறக் கலயம் முதுமக்கள் தாழியிலிருந்து கிடைத்திருப்பதும் கடற்கரையில் விழாக் காலங்களில் மக்களின் தாகத்தைத் தீர்த்த உறைகிணறு வெளிப்பட்டிருப்பதும் வரலாற்றாய்விற்கும் தமிழியல் ஆய்விற்கும் புதிய வெளிச்சத்தைத் தரக்கூடும்.

நன்றி: தினமணி

From → Uncategorized

One Comment
  1. நல்ல கண்டுபிடிப்பு. சுவையான செய்தி. புகார், மல்லை, பழையாறை, கொற்கை, அலைவாய் நகரம், தென்மதுரை என அகழப்படவேண்டியவை மிக உள. பழந்தமிழ் நகரங்கள் மீண்டும் உயர்வு கண்டு பண்டை தமிழுலகம் பற்றி உலகுக்கு உணர்த்த திருமாலும், மருகனும் அருளட்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: