Skip to content

பழங்கலத்தில் பழங்கள்

ஜூன் 4, 2008

ரெ.கார்த்திகேசு

நான் பினாங்குக்கு 1975இல் வந்தேன். இப்போது 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. பிறந்தது பீடோ ங் என்ற ஊரில்; படித்தது ஹார்வார்ட் தோட்டத்துத் தமிழ்ப் பள்ளி (அப்போது தெரியாவிட்டாலும் இப்போது அந்தப் பெயரின் மகிமை பூரிக்க வைக்கிறது); ஆங்கிலம் படித்தது சுங்கை பட்டாணியிலும் கூலிமிலும்; 19 வயதில் ஐந்தாம் படிவம் முடித்து வேலை செய்ய வந்த இடம் குவாலா லும்பூர். 16 ஆண்டுகள் தலை நகர் வாசம் முடிந்து ஒலிபரப்புப் பணிக்குத் தலை முழுகி கல்விப்பணி மேற்கொண்டு பினாங்குக்கு வந்து சேர்ந்தேன். சொல்வது போல் பாலத்தின் கீழ் நிறையத் தண்ணீர் ஓடிவிட்டது.

பினாங்குதான் இப்போது சொந்த ஊராக ஆகிவிட்டது. பினாங்கை நான் அதிகம் நேசிக்கிறேன். என் படிப்பையும் வாழ்க்கையையும் எழுத்தையும் ஒளிர வைத்த ஊர் இதுதான். கல்வி, ஆய்வு, இலக்கியம், சமயம், சமூகம் எனப் பல பணிகள் ஆற்றி ஓய்ந்தாகிவிட்டது.

பினாங்கை என் கதைகளிலும் நாவல்களிலும் அதிகமாகவே நான் காட்டியுள்ளேன். அதைப் பலர் ரசிக்கிறார்கள். ஆனால் மலாக்காவைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர்/வாசகி “ஏன் இப்படிப் பினாங்கையே வளைத்து வளைத்து எழுதுகிறீர்கள்? சலிப்பாக இருக்கிறது” எனவும் எழுதியிருந்தார்.

என்ன செய்வது அம்மா? என் இதயத்துக்கு அணுக்கமான இடமாக இப்போது இது ஒன்றுதான் இருக்கிறது. இதைப் போன்று எண்ணிய அளவில் உற்சாகம் தரும் வேறோர் ஊர் இல்லை. இங்குள்ளதைப் போல சல சலவென்று காற்று வீசுகிற கடற்கரை வேறு எங்கு இருக்கிறது? சீனரும் பாபாஞோஞாக்களும் மலாய்க்காரரும் சயாமியரும் பர்மியரும் இந்தியர்களும் கலந்து வாழும் வர்ணஜாலம் உள்ள ஊர் வேறு எது? (இந்தியர்களில் எத்தனை வகை! பிள்ளைமார், தேவர்மார், செட்டியார், யாழ்ப்பாணத்தவர், மலையாளியர், தெலுங்கர், சீக்கியர், குஜராத்தியர், சிந்தியர், தமிழ் கிறிஸ்துவர், தமிழ் இஸ்லாமியர்.) இங்கே போல ஆசியாவிலேயே சிறந்த சீன உணவும் நாசி கண்டாரும் செண்டோ லும் ரோஜாக்கும் கிடைக்கும் ஊர் வேறு எது? இன்னும் பிரிட்டிஷ் காலனியாதிக்கக் காலச் சின்னங்களையும் மரபு வழியான சீனர் கட்டிடக் கலையையும் பழைய ஹிந்துக் கோயில்களையும் கவனமாகப் போற்றிப் பாதுகாத்து வரும் ஊர் வேறெது? உங்களுக்கு உங்கள் ஊர் பெரிதாக இருக்கலாம். எனக்கு இந்தப் பினாங்குதான்.

இப்போ, இந்தப் பினாங்கு இந்தியர்களின் பழசைக் கொஞ்சம் கிளறிப் பார்ப்போம்.

1760 வாக்கில் பிரான்சிஸ் லைட் இந்தத் தீவை கெடா சுல்தானிடமிருந்து வாங்கினார். ஆரம்பத்தில் இது குற்றவாளிகள் தீவாகத்தான் பயன்படுத்தப் பட்டது. 1786இல் இதற்கு மூன்றாம் ஜோர்ஜ் மன்னரின் பெயராக ஜோர்ஜ் டவுன் என்ற பெயரைச் சூட்டினார். இன்றளவும் அந்தப் பெயர் நிலைத்திருக்கிறது. இந்த நகரை நிறுவ உழைத்தவர்கள் சூலியாக்கள், சீனர்கள், கிறிஸ்துவர்கள் என லைட் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சூலியாக்கள் தமிழர்கள்தான். இன்றும் சூலியா ஸ்த்ரீட் பினாங்கில் இருக்கிறது. தமிழர் பெயரிலும், கிளிங் என்ற பெயரிலும், மதராஸ் பெயரிலும் தெருக்கள், இடங்கள் இன்னமும் இருக்கின்றன.

1801இல் கிழக்கிந்தியக் கம்பெனி 130 இந்தியக் குற்றவாளிகளை இங்கு கொண்டுவந்து அவர்களை இப்போதுள்ள பிஷப் சாலை, சர்ச் சாலை ஆகியவற்றை அமைக்கப் பயன் படுத்தியது. இந்தக் குழுவில்தான் சின்ன மருதுத்தேவரின் மகன் துரைசாமித் தேவர் இருந்திருக்கிறார். (பீர் முகமதுவின் “மண்ணும் மனிதர்களும்” நூலில் இவர் பற்றி எழுதியிருக்கிறார். ப.சந்திரகாந்தமும் இந்தக் கதையை எழுதியுள்ளார். கலைஞர் கருணாநிதியும் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மருது சகோதரர்களின் குடும்ப நண்பர், (பின்னர் பிரான்சிஸ் லைட்டின் மருமகன்) கேப்டன் வெல்ஷ், துரைசாமித் தேவரை இங்கு 1818இல் கைதியாகச் சந்தித்திருக்கும் சோகத்தைக் குறித்திருக்கிறார்.)

பினாங்கு பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் அதிவேக வளர்ச்சி அடைந்தது. சாலைகள் அமைக்கவும் தண்ணீர் அளிப்பு வசதிகள் அமைக்கவும், போக்குவரத்து, நீர்ப்பாசனம், கழிவு நீர் வசதிகள் ஆகியவற்றுக்காகவும் தென்னிந்தியர்கள் சஞ்சிக் கூலிகளாகக் கொண்டுவரப்பட்டனர். பின்னர் குஜராத்திகள், தமிழ் முஸ்லிம்கள் முதலியோர் வர்த்தகர்களாக வந்தார்கள். அவர்கள், பாக்கு, மருந்து, மூலிகைகள், வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி செய்து (இப்போ இதில் எதையுமே காணோம்) உணவுப் பொருட்களை இறக்குமதி செய்தார்கள். அவர்களின் சந்ததியினர் பலர் இன்றும் கப்பல் தொழிலிலும் ஏற்றுமதி இறக்குமதியிலும் இருக்கிறார்கள். இளைய தலைமுறை நவீன தொழில்களில் (வழக்கறிஞர், டாக்டர்) நிபுணத்துவம் பெற்றிருக்கிறது.

கிழக்கிந்தியக் கம்பெனி பினாங்கில் நன்கு காலூன்றியவுடன் அது ஒரு பத்திரிகை நடத்தத் திட்டமிட்டது. ஆனால் இங்கு பத்திரிகை அச்சடிப்புத் தொழில் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. ஆகவே மதராசிலிருந்து (இப்போதைய சென்னை) அச்சுத் தொழில் தெரிந்தவர்களைக் குடியிறக்கினார்கள். இவர்களைக் கொண்டே “பினேங் கெஜட்” (Penang Gazette) ஆரம்பிக்கப் பட்டது. இந்த அச்சுத் தொழிலாளர்கள் ஆர்கைய்ல் ரோட், டிரான்ஸ்கபர் ரோட், பினேங் ரோட், நோர்தம் ரோட் ஆகியவற்றைச் சுற்றிக் குடியேற்றப் பட்டார்கள்.

இந்த பினேங் கெஜட் பத்திரிக்கையில் பணியாற்ற வந்தவர் வி.நடேசம் பிள்ளை. 1890இல் இந்தப் பத்திரிக்கையின் அச்சுக்கூட மேற்பார்வையாளராக ஆகி 1933 வரை பணியாற்றினார். அதன் பின் தனது சொந்த அச்சகமாக “மெர்கண்டைல் பிரஸ்’ தொடங்கினார். பினாங்கு ஹிந்து சபா இவரால்தான் தொடங்கப் பட்டது. சபாவில் ஆரம்பத்தில் ஈடுபட்டிருந்த அனைவரும் அச்சுத் தொழிலாளர்களே. பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து “சமாதான நீதிபதி” பட்டத்தைப் பெற்ற முதல் இந்தியர் நடேசம் பிள்ளைதான்.

ஆர்கைல் ரோட்டின் அருகே வசித்த பலர் அந்தக் காலத்திலேயே தங்கள் கூலித் தொழில்களில் இருந்து விடுபட்டு வசதியாக வாழ்ந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. அவர்கள் நல்ல கல் வீடுகளில் வசித்ததோடு சொந்தமாகக் குதிரை வண்டி வைத்துக் கொண்டு கம்பீரமாகச் சவாரி சென்றிருக்கிறார்கள்.

இவர்களில் ஒருவர் தாயம்மாள் அம்மாள் என்ற பெண்மணி. இவர் சொந்தமாக வைத்துப் பயன்படுத்திய குதிரை வண்டியை இப்போதுமுள்ள குயின் ஸ்த்ரீட் அருள்மிகு மாரியம்மன் கோயிலுக்குத் தானமாகக் கொடுத்தார். (இந்த வண்டி பலகாலம் பயன் படுத்தப்பட்டு பழுது பட்டு இப்போது கைவிடப்பட்டுள்ளது.) தாயம்மாள் அம்மாளின் வழித்தோன்றல்கள் இப்போதும் பாலிக் புலாவிலும் பட்டர்வர்த்திலும் இருப்பதாகச் சொல்லப் படுகிறது.

தமிழர்கள் அமைத்து நிலைபெற்ற குடியிருப்புகளில் டோ பி காட் (வண்ணான் துறை) என்பதும் குறிப்பிடத் தக்க ஒன்று. சலவைத் தொழிலாளர்கள் தங்கள் தொழிலை நடத்திய இடம். பினாங்கு நதியின் ஓரமாக அமைந்தது. இப்போது பினாங்கு நதியின் நீர் பயன் படுத்த முடியாத அளவு கெட்டுவிட்டாலும் இப்போதும் சலவைத் தொழிலாளர்கள் குழாய் அமைத்துக் கொண்டு அங்குத் தொழில் பார்த்து வருகிறார்கள்.

ஆரம்ப காலத்தில் இப்படித் தொழில் பார்த்து செழிப்படைந்தவர்களில் ஒருவர் ஒரு பெண்மணி. இப்போது டோ பி ராணி என்று மட்டுமே பெயர் தெரிகிறது. இவர் பெயர் இன்றளவும் தெரியக் காரணம் இவர் தனது சொந்த நிலத்தைத் தானமாகக் கொடுத்து இங்கு இப்போது அமைந்துள்ள இராமர் கோயிலைத் தோற்றுவித்ததுதான். (பி.கு.: இப்போது இந்தக் கோயிலுக்கு முன்னாள் பகுத்தறிவுப் புயலும் இன்னாள் ஆன்மீகத் தென்றலுமாக விளங்கிவரும் அன்புக்குரிய சித. இராமசாமி அவர்கள் தலைவராக இருக்கிறார்.)

சரி, இப்போ கொஞ்சம் மூச்சு விட்டுக் கொண்டு, வெறும் 30 ஆண்டுகளுக்கு முன்பு பினாங்குக்கு வந்த எனக்கு இந்த இரண்டரை நூற்றாண்டுக் கதை தெரிய வந்த கதையைக் கூற வேண்டும்.

2001ஆம் ஆண்டில் பினாங்கு முதுசொம் அறக்கட்டளையும் (Penang Heritage Trust) பினாங்கு மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கமும் (Malaysian Indian Chamber of Commerce and Industry, Penang) இணைந்து “பினாங்குக் கதை” என்ற கருப்பொருளில் ஒரு கருத்தரங்கத்தினை நடத்தின. அதில் நானும் ஒரு செயற்குழு உறுப்பினராக இருந்தேன். அதில் பினாங்குத் தமிழர்கள் பற்றிய இத்தனை அரிய தகவல்களைத் திரட்டித் தந்தவர் பி.கிருஷ்ணன் என்று எல்லோருக்கும் தெரிந்த பி.இராஜவேலன். அவருடைய கட்டுரையிலிருந்துதான் இந்தத் தகவல்கள் அனைத்தும். இன்னும் இருக்கின்றன. “நாற்காலிக்காரர் கம்பம்” பற்றியும் “தண்ணீர்மலை” சிறப்பு பற்றியும் அடுத்து எழுதுகிறேன்.

இருக்கட்டும். இந்த பத்திக்கு நான் கொடுத்துள்ள தலைப்பு யாருக்காவது புரிகிறதா? எங்கிருந்து இந்த வாசகம் எடுக்கப் பட்டிருக்கிறது தெரிகிறதா? சரியான விடை யாராவது சொல்லக் கூடும் என ஒரு மூன்று வாரம் காத்திருக்கிறேன். சொல்பவர்களுக்குப் பரிசு உண்டு. யாரும் சொல்லவில்லையானால் அப்புறம் நானே சொல்லிவிடுகிறேன்.

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: