Skip to content

தமிழிசை வளர்த்த ஆபிரகாம் பண்டிதர்

ஜூன் 25, 2008

கண் துஞ்சாமல், மெய் வருத்தம் பாராமல், கற்பனையைப் பறக்கவிட்டு, வண்ணங்களைக் குழைத்தெடுத்து, தன் திறமை முழுவதையும் கொட்டி, அழகு சொட்டும் வண்ண ஓவியம் ஒன்றை எழுதினானாம் ஒருவன்.

மற்றொருவன் அதன் கீழே அவனது பெயரை எழுதினானாம். யாருடைய பெயர் ஓவியத்தில் உள்ளதோ, அவனே சித்திரத்தை எழுதியதாக இன்றளவும் நம்பப் படுகிறதாம். ஏறத்தாழத் தமிழிசையின் கதை யும் இது தான்.

வரலாறு எழுதாமையும் அதைப் பேணாமையும் தமிழரின் மிகப் பெரும் குறைகள். தமிழரின் சாதனைகளுக்கு உரிமை கொண்டாட நினைப்போரின் வேலை சுளுவானது. நமது வரலாற்றைத் திரிப்பது எளிது. புதைக்கப்பட்ட வரலாற்றைத் தோண்டி எடுக்கவும் திரிக்கப்பட்ட சரித்திரத்தைத் திருத்தி அமைக்கவும் கடும் முயற்சிகள் தேவை. தமிழிசையின் வேர்களைக் கண்டு பிடித்து, அது கர்நாடக இசையாகத் திரிந்து வந்துள்ளதை நிறுவிய ஆராய்ச்சியாளர்களின் முன்னோடி ஆபிரகாம் பண்டிதர். ‘யாழ் நூல்’ இயற்றிய விபுலானந்தருக்கும் முந்தியவர் பண்டிதர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியிலும் கர்நாடக இசையையும் பழைய தமிழ் நூல் களையும் ஆழமாக ஆராய்ந்து ஆபிரகாம் பண்டிதர் எழுதிய நூல் ‘கருணாமிர்த சாகரம்’.

ஆயிரத்து இருநூறுக்கும் அதிகமான பக்கங்கள் கொண்டது அந்நூல். இசையின் வரலாறு, அறிவியல், இலக்கியம், இசை வாணர்கள் பற்றி விரிவாகவும் நுட்பமாகவும் அது அலசுகிறது. இசை பற்றிய கலைக்களஞ்சியமாக அதைச் சொல்லலாம்.

புஷ்பக விமானம், கூடுவிட்டுக் கூடுபாய்தல் எனப் பண்டிதர் கயிறு திரிக்கவில்லை. ஆய்வுப் பொருளை அறிவியல் பார்வையில் அவர் அணுகினார். கேள்விகளை எழுப்பினார். விடைகளைக் கண்டறிந்தார். தமது கருத்துகளுக்கு வலுச் சேர்க்கும் வாதங்களை அடுக்கினார். பின்னப் பகுப்பு முறையில் அமைந்த நமது சுருதியமைப்பில் ஏழு சுவரங்களும் பன்னிரண்டு சுவர தாளங்களும் உள்ளன. இருபத்தி நான்கு சுருதிகள் இருப்பதுதானே முறை! ஏன் இருபத்திரண்டு சுருதிகள் மட்டும் உள்ளன? அது தவறல்லவா என்ற வினாக்களைத் தொடுத்தார். வித்துவான்களிடமும் அறிஞர்களிடமும் விவாதித்தார். பத்திரிக்கைகள் வாயிலாக மக்களிடமும் விடை பெற முயன்றார். தாய்ப்பண் எனும் அடிப்படை இராகம் மேளகர்த்தாவிலிருந்து பிறக்கிறது. கர்நாடக சங்கீதம் எழுபத்திரண்டு மேளகர்த்தாக்களைப் பற்றிப் பேசுகிறது. ஆனால், “32 மேளகர்த்தாக்களுக்கு மட்டுமே ஜன்யராகத்தகுதி இருப்பது ஏன்?” என ஆபிரகாம் பண்டிதர் கேட்டார். சங்க இலக்கியங்கள், சிலப் பதிகாரம், பக்தி இலக்கியங்களைக் கற்றுணர்ந்து, அவற்றில் இசை, இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகளையும் ஆராய்ந்து விளக்கினார். நாதசுவரம், கின்னாரி போன்ற வாத்தியங்கள் கடல்கோளுக்கும் முந்திய தொன்மையுடையவை என நிறுவினார். நமது செங்கோட்டி யாழே நவீன கால வீணை என்றும் நிரூபித்தார்.

தமிழாசிரியராகப் பணிபுரிந்த ஆபிரகாம் பண்டிதர், ஒரு சித்த வைத்தியருமாவார். சுருளி மலையில் வசித்த கருணானந்தர் என்ற ஞானியிடம் பண்டிதர் மருத்துவ முறைகளையும் மூலிகை இரகசியங்களையும் கற்றறிந்தார். தஞ்சாவூரில் ஒரு தோட்டம் அமைத்து மூலிகை ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்து வந்தார். தமிழ் வைத்திய முறையைப் பற்றிய ஆராய்ச்சிகளுக்காக அரசு அவருக்கு ‘இராவ் பகதூர்’ என்ற பட்டம் வழங்கியது.

1907ஆம் ஆண்டு ‘கருணாமிர்த சாகரத் திரட்டு’ என்ற புத்தகத்தைப் பண்டிதர் வெளியிட்டார். தொண்ணூற்றைந்து தமிழ்ப் பாடல்கள் அதிலிருந்தன. அத்தனையையும் எழுதியவர் ஆபிரகாம் பண்டிதரே. ஒவ்வொன்றுக்கும் அவரே இசையமைத்து அவற்றின் சுவரங்களையும் வெளியிட்டார்.

இசையுலகில் சுடரொளிவிட்டுப் பிரகாசித்த ஜாம்பவான்களுடன் தன் வாழ்நாள் முழுவதிலும் அவர் தொடர்பு கொண்டிருந்தார். கோனேரிபுரம் வைத்யநாத ஐயர், அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், பஞ்சாபகேச பாகவதர் ஆகிய இசைவாணர்கள் பண்டிதரின் நண்பர்கள்.

தென்னிந்தியாவின் முதல் இசை மாநாட்டை மாபெரும் அளவில் பண்டிதர் நடத்தினார். அதனைத் தொடர்ந்து ஆறு மாநாடுகளை அவர் கூட்டினார். இசை மாநாடுகள் பண்டிதரது சொந்த செலவில் நடந்தன. ஒவ்வொன்றிலும் பயன் மிகு விவாதங்கள் நடந்தன. புது கருத்துகள் வெளியாயின.

டிசம்பர் 14, 1912இல் சங்கீத வித்யா மகாஜன சங்கம் என்ற அமைப்பைப் பண்டிதர் தோற்று வித்தார். தென்னிந்திய இசை வளர்ச்சியே அதன் குறிக்கோள். இசைப்பள்ளி ஏற்படுத்துதல், இசை ஆராய்ச்சி, இசை பற்றிய சந்தேகங்களைத் தீர்த்தல் என்பன சங்கம் பின்பற்றிய முறைகள். தஞ்சாவூரின் திவான், ஆபிரகாம் பண்டிதரின் இசை மாநாடுகளைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதே பாணியில் அகில இந்திய அளவில் இந்திய இசை பற்றிய மாநாட்டைப் பரோடாவில் கூட்டினார். அதில் பண்டிதர் பங்கேற்றுக் கட்டுரை வாசித்தார். மாநாட்டில் ஆபிரகாம் பண்டிதரது மகள் மரகதவள்ளியம்மாள் வீணை மீட்டினார்.

பண்டிதரின் மூன்றாவது மகனாகிய வரகுண பாண்டியன், தம் தந்தை 1919ஆம் ஆண்டு மறைந்தபோது விட்டுச் சென்ற ஆராய்ச்சியைத் தொடர்ந்து மேற்கொண்டார். ‘பாணர் கைவழி என்னும் யாழ்நூல்’ அவரது படைப்பு.

தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக் கருவி, மிடற்றுக் கருவி என்பன குயிலுவக் கருவிகள் எனப்பட்டதாக வரகுண பாண்டியன் கூறுகிறார். மிடறு என்றால் ‘தொண்டை’ எனப் பொருள். மிடற்று இசையே வாய்ப்பாட்டு. கஞ்சக்கருவி உலோகத்தால் ஆனது. ஜலதரங்கம், மோர்சிங் போன்றவை கஞ்சக் கருவிகள்.

யாழ் முதலிய இசைக் கருவிகளின் விவரிப்பை வரகுண பாண்டியன் தருகிறார். யாழின் பதினெட்டு உறுப்புகளைச் சுட்டிக் காட்டுகிறார். தனது தந்தை, சகோதரனைப் போலவே பண்டிதரின் மகள் மரகதவள்ளியம்மாளும் தமிழிசை ஆராய்ச்சியில் ஈடுபாடுள்ளவர். கருணாமிர்தசாகரத்தின் இரண்டாம் பகுதியை அவர் எழுதியுள்ளார்.

1859ஆம் ஆண்டு பிறந்த ஆபிரகாம் பண்டிதரின் 148ஆம் பிறந்தநாள் விழாவின் போது அவரது குடும்ப வாரிசான முனைவர் அமுதா பாண்டியன் ‘கருணாமிர்தசாகரம்’ பற்றிய ஆய்வு நூலை வெளியிட்டார். ஆறு ஆண்டுகள் ஆராய்ச்சிகளின் பலனான அப்புத்தகத்தின் முதல் பிரதியைப் பேராசிரியர் அன்பழகன் கொடுக்க பண்டிதர் வழி வந்த முத்தையா பாண்டியன் பெற்றுக்கொண்டார். பாடல்கள் இயற்றிப் பண்ணமைத்து, இசையாராய்ச்சி செய்து, மாநாடுகள் நடத்தி, நூல் வெளியிட்டு தமிழிசை வளர்த்த ஆபிரகாம் பண்டிதரின் ஆய்வு மனமும், தமிழ்ப்பற்றும், இசை ஆர்வமும் நூற்றாண்டுகள் கடந்து, தலைமுறை களைத் தாண்டி மங்காமலிருக்கின்றன.

நன்றி – கலைகேசரி
சொல்புதிது இதழ்-9 இல் வெளிவந்த கட்டுரை

3 பின்னூட்டங்கள்
  1. மிக பயனுள்ள தகவல்.. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. தஞ்சையில், ஆபிரகாம் பண்டிதர் சாலை என்று ஒரு சாலை உண்டு. பல காலம், யார் இந்த ஆபிரகாம் பண்டிதர் என்று தெரியாமலே இருந்து, இன்றுதன் அறியும் வாய்ப்பு அமைந்தது..

  2. உண்மையில் மிகவும் பயனுள்ள செய்தி..கருணாமிர்த சாகரம் பற்றிய வேறு சில குறிப்புகள் வேறு நோக்கத்தில் படிக்க நேர்ந்தது;உங்கள் இந்தப் பதிவு மேலும் துணை செய்யும் என நினைக்கிறேன்.அறியத் தந்தமைக்கு நன்றிகள்.

  3. நல்ல தகவல்களைச் சொல்லியுள்ளீர்கள்.பாராட்டும் நன்றியும்.பண்டிதர் தோட்டம் என்ற அவருடைய மூலிகைப் பண்ணை பெரிய தோட்டமாக இருந்தது.அவர் குடும்பத்தில் பலர் மருத்துவத் துறையில் உள்ளனர்.அவரைப் போன்றே இன்று கலைக் காவேரி என்று இசைக் கல்லூரி திருச்சியிலே அருட்தந்தை ஜியார்ஜ் அடிகளாரால் ஆரம்பிக்கப் பட்டு தமிழ் இசை பட்டப் படிப்புக்கள் நடத்தப்படுகின்றது.கிராமத்து மாணவச் செல்வங்கள் இசை ,நாட்டியம் இவையெல்லாம் தமிழின் பெருமையுடன் தமிழரால் படைக்கப் பட்டன் என்பதைச் செயலிலே நல்ல தமிழ்ப் பாடல்கள் பற்பல இசைகளுடன்பாடப்படுவதும்,நாட்டியங்கள் நடத்தப் படுவதும் உலகெங்கும் சென்று பாராட்டுக்கள் பெற்று வருவதும் பலருக்குத் தெரிய வில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: