பொருளடக்கத்திற்கு தாவுக

"தமிழ் ஞாயிறு" பண்டிதமணி

ஜூலை 12, 2008
‘பூங்குன்றம்’ என்னும் பெயரைக் கேட்டவுடன் நம் நினைவுக்கு வருபவர்கள் இரண்டுபேர். ஒருவர், “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாடிய சங்கச் சான்றோர் கணியன் பூங்குன்றனார். மற்றொருவர், “பண்டிதமணி” என்று அனைவராலும் போற்றப்படும் மகாமகோபாத்தியாய, முதுபெரும் புலவர் பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார். ஏழு மாதம் கூடப் பள்ளிக் கூடத்தில் கல்வி பயிலாமல், பன்னிரண்டு ஆண்டுகள் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து, தமிழ்ப்பணி ஆற்றிய தனிச்சிறப்பு இவருக்கு உரியது.

முயற்சியும் மன உறுதியும் இருக்குமானால் உடல் ஊனமுற்றவர்களும் உயர்நிலையை அடைய முடியும் என்பதற்குக் கதிரேசனாரின் வாழ்க்கை எடுத்துக்காட்டாகும்.

பண்டிதமணி மூன்று வயதில் இளம்பிள்ளை வாதத்தால் தாக்கப்பெற்றார். குடும்பச் சூழல் முறையான கல்வியைப் பெற அவருக்குத் துணை நிற்கவில்லை. பதினோரு வயதில் அவர் இலங்கை சென்று ஒரு கடையில் பணியில் சேர வேண்டிய நெருக்கடி நேர்ந்தது. பதினான்கு வயதில் பண்டிதமணியின் தந்தை காலமானார். அதே ஆண்டில் அவரது இடது காலும்,இடது கையும் வலுக்குறைந்தன. திருமணம் தள்ளிக்கொண்டே போய்
32-வது வயதில்தான் நிகழ்ந்தது.

இடையில் பீமகவி என்பவர் பண்டிதமணி மீது வழக்குத் தொடர்ந்தார். முதுமையில் மனைவி உயிர் நீத்தார். இவ்வளவு துன்பங்கள் வாழ்வில் அணிவகுத்து வந்தும், அவற்றால் சிறிதும் நிலைகுலைந்து, நெஞ்சம் துவண்டு விடவில்லை அவர். உள்ள உறுதியால் தமது உடற் குறையை வென்றார். தன் முயற்சியால் தமிழும்,வடமொழியும் கற்றார்.
பண்டிதமணி“,
முதுபெரும் புலவர்“,
சைவ சித்தாந்த வித்தகர்“,
மகாமகோபாத்தியாய
ஆகிய மிக உயரிய பட்டங்களைத் தம் வாழ்நாள் பணிகளுக்காகப் பெற்றார். இவ்வளவு உயர்வுகளுக்கும் காரணம் அவரிடம் குடிகொண்டிருந்த ஆளுமைப் பண்பே ஆகும்.

“இளம்பிள்ளை வாதத்தால் இருந்தது, அந்த
ஒண்டமிழ்ப் புலவர்க்கு ஒருகால் ஊனம்; இல்லை-
ஒண்டமிழ்ப் புலமையில் ஒருகாலும் ஊனம்!
வடமொழியும் வண்ணத் தமிழும் வீற்றிருந்தன விரல் நுனியில்
நற்கருத்தும் நகைச்சுவையும் குமிழியிட்டிருந்தன குரல் நுனியில்!”

என்று கவிஞர் வாலி, பண்டிதமணி பற்றிக் குறிப்பிடுவது இங்கே மனங்கொள்ளத்தக்கது.

பண்டிதமணிக்கு நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு. அவரது சொற்பொழிவுகளிலும், தனிப்பட்ட உரையாடல்களிலும் நயமும் நகைச்சுவையும் இழையோடும். நடக்க முடியாத சூழ்நிலையில் இருந்ததால், வீட்டில் இருந்துகொண்டே படித்தார்.

பண்டிதமணி இலக்கியச் சுவையில் நயங்காணும் புதிய உத்திகளைக் கண்டவர்கள்:-

உ.வே.சா. “பதிப்புத் தந்தை” எனவும்,
மறைமலையடிகளை “உரைநடைத் தந்தை” எனவும்,
பண்டிதமணியை “தமிழ்நயத் தந்தை” என்றும் நாடு பாராட்டியது எனக் குறிப்பிடுகிறார் அறிஞர் வ.சுப.மாணிக்கம்.

பீடும் பெருமிதமும் வாய்ந்த புலமை வாழ்க்கையை நடத்தியவர் பண்டிதமணி. தம் கூரிய அறிவுத் திறத்தாலும் சீரிய அகக்கண்ணாலும் உயர்நிலைப் பாவலர் மயர்வற ஆக்கிய விழுப்பொருள் நிறைந்த செய்யுட்களில் சமயக் கட்டுரையில், இலக்கியக் கட்டுரையில், திருவாசக உரையில் என ஒல்லும் வகையெல்லாம் கண்டு உணர்ந்த நயங்களும் நுண்பொருள்களும் மிகப் பலவாகும். இவை முன்னர் யாராலும் காணப்படாதவை, அருமையும் அழகும் வாய்ந்தவை, உலப்பிலா இன்ப விளைவிற்கு ஏற்றவை.

ஒரு சான்று:

யாரும் இல்லைத் தானே கள்வன்;
தான்அது பொய்ப்பின் யான்எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறுபசுங்கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான் (குறுந்தொகை-25)

என்பது புகழ்பெற்ற குறுந்தொகைப் பாடல்.

தலைவியை வரைந்து கொள்ளாமல் களவொழுக்கத்தை நீட்டித்துச் செல்லும் தலைவனின் இயல்பினைக் குறித்துத் தலைவி தோழியிடம் வருந்திக் கூறுவதாக அமைந்தது இப்பாடல்.

“தோழி, தலைவன் என்னைக் களவில் மணந்த காலத்தில் சான்றாவார் வேறு ஒருவரும் இலர். தலைவன் ஒருவனே இருந்தான். அவனே தான் கூறிய சூளுறவினின்றும் தப்பி ஒழுகுவானாயின் நான் யாது செய்ய வல்லேன்? அவ்விடத்து அச்சமயம் ஒரு நாரை மாத்திரம் இருந்தது. அதுவும் ஓடும் நீரில் தான் உண்ணும் பொருட்டு ஆரல் மீனின் வரவை எதிர்பார்த்து நின்றதாகலின், எம் நிகழ்ச்சியைக் கண்ணுற்றிராது,” என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.
இதற்குப் பண்டிதமணி கூறும் விளக்கம் பிற உரைகளினின்றும் வேறுபட்டது. வேறுபட்டது மட்டுமன்றி மேம்பட்டது என்பதும் பொருந்துவதேயாகும். நயமான அவ்விளக்கம் வருமாறு:

தோழியை நோக்கி, “தலைவன் என்னைக் களவில் மணந்த காலத்தில் ஒரு நாரை மாத்திரம் இருந்தது. அதுவும் ஓடும் நீரில் தானுண்ணும் பொருட்டு ஆரல் மீனின் வரவை எதிர்பார்த்து நின்றதாகலின், எம் நிகழ்ச்சியைக் கண்ணுற்றிராது. காணாத ஒன்றைப் பற்றிச் சான்றாதற்குத் தமிழ் நிலத்துப் புள்ளும் ஒருப்படாது, வாய்மை நெறியொழுகும் இயல்பினதாகலின்,” என்று தலைவி கூறினாளாம். “தமிழ் நிலத்துப் புள்ளும் வாய்மை நெறி ஒழுகும் இயல்பினது ஆதலின் காணாத ஒன்றைப் பற்றிச் சான்றாதற்கு ஒருப்படாது” என்னும் பண்டிதமணியின் விளக்கம் வியந்து போற்றுவதற்கு உரியது.

நெஞ்சம் உரத்தோடும்,நேர்மைத் திறத்தோடும் எவருக்கும் அஞ்சாமல் தம் மனத்திற்குச் சரியென்று படுவதை எடுத்துரைப்பது அவரிடம் காணப்பெற்ற சிறப்பு இயல்பாகும். இருபதாம் நூற்றாண்டில் தம் பழுத்த புலமைத் திறத்தால் தமிழ் மொழியைப் பல்லாற்றானும் வளர்த்த பெருமை பண்டிதமணிக்கு உண்டு.

உரைநடை,
கவிதை,
உரை,
மொழிபெயர்ப்பு,
ஒப்பீடு,
சொற்பொழிவு,
கல்வி

என்றாற்போல் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்த பல்துறை வித்தகராக விளங்கினார்.

மண்ணியல் சிறுதேர்,
சுலோசனை,
கெளடலீயம்,
சுக்கிரநீதி

போன்ற வடமொழிப் பெருநூல்களை அழகிய முறையில் மொழிபெயர்த்து அப்பர் பெருமான் “உழவாரப்பணி” செய்ததுபோல் தமிழாரப்பணி செய்தவர் பண்டிதமணி. தமிழை உயிராகவும், சைவத்தைக் கண்களாகவும் போற்றிய பெருந்தகையாளர் அவர்.

கதிர்மணி விளக்கம்” என்ற தலைப்பில் பண்டிதமணி திருவாசகத்துக்கு எழுதிய பேருரையைப் பாராட்டாத தமிழறிஞர்களே இல்லை எனலாம். “தமிழ்ஞாயிறு” எனச் சான்றோர்களால் போற்றப்பெறும் அவர், தமது பல்துறைப் பணிகளால் என்றென்றும் நிலைபெற்று விளங்குவார் என்பது திண்ணம். இவரது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் “மகிபாலன்பட்டி” என்ற சிற்றூரில் இவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முனைவர் நிர்மலா மோகன்

நன்றி:-தமிழ்மணி (தினமணி)

மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: