Skip to content

: Ponmazhai

செப்ரெம்பர் 13, 2008

 
 
 
 
ஓம்.
 
திருச்சிற்றம்பலம்
 
தமிழ்க்கவியாக்கம்: கவிதாமணி,உபயபாஷா ப்ரவீண,
செந்தமிழ்க் கவிதைச் செம்மல்
(திரு.அ.வெ.ர.கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்கள்)
 
        ஆதிசங்கரர் அருளிய கனகதார ஸ்தோத்திரம்
 
               திருச்சிற்றம்பலம்
 
        அங்கம் புளகமுற ஹரிமேனி தன்னை
           அனுபவித்து அணி செய்நின்,ஒளிநிறைந்த,பார்வை
        துங்கமுறும்,தம்மால,முகை தமையே,சார்ந்து
           சுடரும்பெண் வண்டுகள் தாம் சூழ்ந்திருப்ப தொக்கும்
        மங்களம்சேர் மகாலட்சுமி அனைத்து நல மெல்லாம்
           வழங்கு திறல் நின் கண்படைத்து விளங்கு கின்றதம்மா
        பொங்கு நலன் அத்தனையும் பொழிவது வேயாகப்
           பொருந்துக நின் பார்வையது என்மீது தாயே.                1
 
        நீலோத்பல மலருள் போய்வந்து மீண்டும்
           நிறைகாணா தவிக்கின்ற பெண் வண்டைப் போல
        மாலின்முக மண்டலத்தே நோக்கும் நின் விழிகள்
           மயங்குவதும் ரசிப்பதுவும் ஆசை வெட்கம் துள்ள
        பாலித்துத் தியங்குவதாய் பார்வையது கொண்டாய்
           பாற்கடலின் திருமகளே நினது கடைப் பார்வை
        சால்புடைய என்மீது தவழவிட வேண்டும்
           சகல நலன் அப்பார்வை தந்துவிடும் தாயே.                 2
 
        அரிதுயிலும் முகுந்தனையே இமையால் நோக்கி
           ஆனந்தப் பெருமிதப்பில் ஆழ்த்துகின்றாய் தாயே
        வரிகாமன் வசம்பட்டு நின்கரு விழிகள் இரண்டும்
           வட்டாடி நிலை புரண்டு இமையோடு சேர்ந்து
        புரிசெவியின் அருகுவரை போய்வந்து மீண்டு
           பூரித்து நீண்டு விட்டதென விளங்கும்
        விரிவிழியின் கருணை நிறை ஒளி நிறைந்த பார்வை
           வீழ்ந்தென்மேல் இன்பத்தில் ஆழ்த்துக என்னாளும்.          3
 
        திருமாலின் திருமார்பில் திகழ் துளபமாலை
           தேவி நீ நோக்க இந்திர நீலமதாய் மாறும்
        பெருமானின் விருப்பமதை நிறைவேற்றும் வலிமை
           பெற்றுத் திகழ்கின்றது நின் ஒளி நிறைந்த பார்வை
        திருமகளே கடைக் கண்ணால் எனை நோக்கு வாயேல்
           திருவுடனே மங்கலங்கள் எனைச் சரணம் செய்யும்
        பெருமனது கொண்டு கடைக்கண் அதனால் நோக்காய்
           பேரின்பச் சுகமெல்லாம் எனைச் சாரட்டும் தாயே.           4
 
        நீருண்ட மேகமெனத் திகழும் திருமாலின்
           நெடிய திருமார்பதனில் கொடி மின்னலென்ன
        சீருடனே விளங்கும் நின் திருவுருவம் தாயே
           செய்தவத்தால் பிருகுமுனி நினைமகளாய்ப் பெற்றான்
        பாருலக மெலாம் நின்னைத் தாயெனவே வாழ்த்தி
           பக்தியுடன் தொழுகின்றார் நினது திருவுருவை
        சார்ந்திட்டேன் நின்னடியைச் சகல நலமருள்
           தாயே என்மீது கடைக் கண் வைப்பாய் நீயே.              5
 
        மங்களங்கள் அத்தனையும் தங்குமிடம் எதுவோ
           மாலுக்கே வலிமைதரும் பார்வையது எதுவோ
        சிங்கநிகர் மதுவென்னும் தீயவனைச் செருக்கத்
           திறம்படைத்த திருமாலின் செளலப்யம் எதுவோ
        பொங்குமதன் மாலிடமே புகுந்ததுறை எதுவோ
           பேரலை கொட்டும் சாகரத்தின் தவமகளே நின்றன்
        தங்குமுக மண்டலத்தில் தவழும் திருப்பார்வை
           தமியேன் என்மீது சிறுதுளி படட்டு மம்மா.                 6
 
        விளையாட்டாய் நின்பார்வை எவர்மீது படினும்
           வியனுலக இன்ப நுகர் அமரேந்திரனு மாவான்
        முளைமுரன் தனைசெகுத்த முகுந்தனும் நின்பார்வை
           முழுவிழியின் திருஷ்டியினால் ஆனந்தத் துயிலாழ்ந்தான்
        துளக்கமுறு நீலோத்பல மலர் மகுடம் போன்று
           தூயநின் திருமுகத்தில் தோன்றும் கடைப் பார்வை
        விளக்கமதாய் அரைப் பார்வை க்ஷண நேரமேனும்
           வீழட்டும் என்மீது கருணை நிறை தாயே.                 7
 
        அஸ்வமேத யாகம் செய்தும் அகலாத பாபம்
           அத்தனையும் அழிய மனச் சுத்திசெய்வ தெதுவோ!
        இச்சகத்தில் எவர் தயவால் இந்திரனார் பதமும்
           இனை சுகமும் சுலபத்தில் பெறுவதெவர் அருளோ
        உச்சிட்ட தாமரையின் நடுப்பாகம் ஒப்ப
           ஒளிர்கின்ற திருமகளே நின் கருணை நிறை பார்வை
        விச்சையுள்ள யெளியேனின் விருப்பமெலாம் நல்க
           வியன் கருணையென என்மேல் பொழிந்திடுவாய் தாயே.     8
 
        சாதகப் புள்ளென நாளெல்லாம் தவித்தேன்
           தரித்திரம் விஞ்சவே வாடினேன் பலநாள்
        பாதகம் தாபம் தரித்திரம் துக்கமெல்லாமும்
           பற்றிய எனைவிட்டு வெகுதூரமே ஓட
        ஆதரவாம் கருணைக் காற்றினால் அசைய
           அருள்பொழி மேகமாய் நின்கண்களெ விளங்கி
        போதனை போல் பொன்மலை என்மீது நீ
           பொழிந்திடு தாயே நின் கருணையாம் விழியால்.           9
 
        சிருஷ்டியிலே கலைமகளாய்த் திகழ்கின்றாய் தாயே
           சீவர்களைக் காப்பதற்குத் திருமகளே யாவாய்
        மருட்டுகின்ற அரக்கர்களை அழிக்கின்ற போது
           மகா துர்க்காயென விளங்கும் வல்லபையும் நீயே
        பெருகு பிறைச் சந்திரனைச் சூடுகின்ற பெம்மான்
           பிரியபத்தினி பார்வதியாய் விளங்குபவள் நீயே
        குரு விஷ்ணு பத்தினியே மூவுலக மெல்லாம்
           கொண்டாடும் மகாலட்சுமி திருவடிக்கே சரணம்.          10
 
        வேதப்பிரம சொரூபமாக விளங்கும் தாயே சரணம்
           விணையின் பயனை பகிர்ந்தளிக்கும் ஆதித்தாயே சரணம்
        சோதி அழகுவடிவாம் ரதியே சுடரே தாயே சரணம்
           தூயமங்கள குணங்கள் அமைந்த கருணைத் தாயே சரணம்
        இதயத் தாமரை இருப்பிடமாக ஏற்கும் தாயே சரணம்
           இதயசுத்தி வடிவாய்த் திகழும் சக்தித்தாயே சரணம்
        உத்தமோ உத்தமன் பத்னியான லட்சுமித்தாயே சரணம்
           உயர்ந்த பூரண சொரூபியான புஷ்டித் தாயே சரணம்       11
 
        பங்கயத்தை யொத்த திருமுக முடையாய் சரணம்
           பாற்கடலில் உதித்த திரு லட்சுமியே சரணம்
        மங்களம் சேர்மதி அமுதம் உடன்பிறப்பாய் பெற்றாய்
           மகிமை மிக்க நாராயணன் மனையரசி லட்சுமி சரணம்     12
 
        தங்கத் தாமரை தன்னில் அமர்ந்த தாயே லட்சுமி சரணம்
           தரணிக் கெல்லாம் தலைவியான தாயே திருவே சரணம்
        மங்கள தயவே தேவர்க்கருளும் மகாலட்சுமி சரணம்
           மகிமை மிக்க சாரங்கபாணி மனையரசி லட்சுமி சரணம்    13
 
        மகரிஷி ப்ருகு முனியின் திருமகளே சரணம் சரணம்
           மகாவிஷ்ணு மார்பில் திகழும் மகாலட்சுமி சரணம்
        தங்க ஆசனம் தாமரை மீதில் தங்கும் தாயே சரணம்
           தாமோதரனின் தர்மபத்னி லட்சுமித் தாயே சரணம்        14
 
        சோதிவடிவே கமல நயனம் துலங்கும் தாயே சரணம்
           செல்வம் சிருஷ்டி தலைவியான திருவே தாயே சரணம்
        ஆதிதேவர் அனையர் போற்றும் அன்னை லட்சுமி சரணம்
           ஆயர்நந்த குமரன் துணைவி அருளும் லட்சுமி சரணம்       15
 
        தாமரைக் கண்கள் படைத்த தாயே செளபாக்ய நல்கும் தேவி
           சகல மாந்தர் போற்றும் தாயே சாம்ராஜ்யம் நல்கும் தேவி
        நேம புலன்கள் ஆனந்தம் பெறவே நெடிய பாபம் தீர்ப்பாய்
           நிந்தன் திருவடி துதிக்கும் பாக்யம் நீயே எனக்குத் தருவாய் 16
 
        கடைக்கண் பார்வை வேண்டியே நாளும் கைதொழுது பூசனை
           புரிவோர்க்கு தமக்கு தடையிலாச் செல்வம் தருபவள் எவளோ
        தயையே மிக்க தயாபரி எவளோ மடை திறந்தென்ன நல்வரங்கள்
           நல்கும் மாயன் முராரியின் இதயத் தலைவி அடைந் திடற்கரிய
        அன்னைநின் திருவடி அடைக்கலம் அம்மா அடக்கலம் போற்றி   17
 
        கமல வாசினி கரக் கமலம் உடையாய் களப சந்தன மாலையும்
           தரித்து நிமலவெண் துகில் மேனியில் தவள நிர்மல ஜோதியாய்
        திகழ்பவள் நீயே அமல முகுந்தன் இன்னுயிர்த் தலைவி அலகில்
           கீர்த்திகொள் மனங்கவர் செல்வி விமலையே நலன்கள்
        எங்களுக் கருள்வாய் வேண்டினேன் தாயே அருள்புரி நீயே      18
 
        தெய்வக் கங்கை நன்னீர் எடுத்து திசையானைகள் தங்கக்
           குடத்தில் ஏந்திஉய்ய நீராட்டும் உடலே உடையாய் உலகத்
        தாயே உலகைப் புரக்கும் தெய்வத் திருமால் மார்பில் திகழும்
           திருவே பாற்கடல் தோன்றிய செல்வி மெய்யாம் நின்றன்
        திருவடிச் சார்ந்தே வைகறை தொழுதேன் வாழ்வளிப் பாயே     19
 
        கமலிநீயே கமலக் கண்ணன் காதலீ கருணை வெள்ளமே
           பொழிந்திடும் திருவே கமலக் கண் பார்வைக் கேங்கி
        இளைத்துக் கதறும் என்றன் துதியினைக் கேட்டு தமியேன்
           நின்றன் தயையினுக் கேங்கும் தரித்திரன் தக்கான்
        எனநீ கனிந்து சமயமறிந்து என்றனுக் கருள நின் தவளும்
           கடைக்கண் வைப்பாய் என்மீதே                         20
 
        மறைகள் மூன்றின் வடிவாய்த் திகழும் வையகம் மூன்றுமே தொழுதிட
           நின்றாய் முறையாய் இந்தத் தோத்திரம் தன்னைநின் முன்றில்
        துதித்துப் போற்றுவோர் தமக்கு நிறைசெல்வம் கீர்த்தி, கல்வி
           ஆரோக்யம் நிறைஆயுள் புத்தி சக்தியும் தந்து துறையெனப்
        புலவோர் போற்றிடச் செய்யும் துணிவும் சக்தியும் தருவாய் தாயே. 21
 
திருச்சிற்றம்பலம்.
வெ.சுப்பிரமணியன் ஊம்

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: