Skip to content

Re: [MinTamil] நினைவலைகள் -17

பிப்ரவரி 15, 2010
ஓம்
பட்டைதீட்டப்பட்டதால் வைரம்!
உருவாக்கும் சிந்தனையால் உருவாகும் கைவண்ணம்!
எளிமையாய் ஊறும் ஊற்றுக்கால்.
நன்குநன்று.
வெ,சுப்பிரமணியன் ஓம்.

 

On 2/15/10, சீதாலட்சுமி <seethaalakshmi@gmail.com> wrote:

நினைவலைகள்  -22

புனிதவதி இளங்கோவன்
அண்ணியாக  இருந்தவர் தோழியானார்
நாங்கள் கருத்துக்களில் ஒன்றுபடுவதும் உண்டு. சிலவற்றில் மாறுபடுவதும்
உண்டு. அது எங்கள் நட்பைப் பாதித்தது இல்லை

இளைஞர்களுக்காக நான் நினைத்த திட்டத்தைக் கூறவும் மகிழ்ச்சியுடன்
ஆதரித்தார். அதுமட்டுமல்ல ஒத்துழைப்பும் தருவதாகச் சொன்னார். எனவே
நாங்கள் இருவரும் சேர்ந்தே திட்டமிட்டோம். மாதம் ஒரு முறை நடக்கும்
கூட்டங்களுக்கும் வந்திருந்து அவர்களே முன்னிருந்து நடத்திக்
கொடுத்தார்கள் ஜூலை மாதம் 17ல் கணிணியைத் தொட்டேன். ஒருமாதத்தில்
அரட்டையில் நண்பர்கள் சேர்ந்து விட்டனர். எனவே முதல் ஒன்றுகூடும் கூட்டம்
ஆகஸ்டு மாதம் ஆரம்பமாகியது.

முதல் கூட்டத்தின் சிறப்புவிருந்தினர் அஸ்வத்தாமா என்ற குமணன். இவர்
வர்த்தக ஒலிபரப்பின் மூலம் இளைஞர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர்.
சென்னை வானொலியில் செய்திப் பிரிவில் வேலை பார்த்தவர். பின்னால் சொந்தத்
தொழிலில் இறங்கிவிட்டார். இவர் பெயரைச் சொல்லவும் இளைஞர்கள் உற்சாகமாகி
விட்டனர். சொற்பொழிவு கிடையாது. கலந்துரையாடல். விருப்பம் போல் கேள்விகள்
கேட்கலாம். அந்தக் கலந்துரையாடல் சுவாரஸ்யமானதாகவும் பயனுள்ளதாகவும்
இருந்தது. புனிதம்தான் பேச்சில் கலந்து கொண்டார்

அடுத்த கூட்டத்தில் தம்பதிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இரு தலைமுறைகளின்
கலந்துரையாடல்.இரு தரப்பும் மனம்விட்டுப் பேசினர்

மூன்றாவதில் இளவயதுப் பெண்கள் வந்தனர். விவாதங்கள் சூடாக இருந்தன.
புனிதம் நடுவராக இருந்து வழி நடத்தினார்கள்

நான்காவது சிறப்பு விருந்தினராக சோதிட அறிஞர் திரு ஏ.வி. சுந்தரம்
அவர்கள் வந்திருந்தார். ஐ.ஐ.டி யில் வேலைபார்த்துக் கொண்டிருந்தாலும்
சோதிடத்தை விஞ்ஞானம் என்ற கருத்தில் ஆய்வு செய்தவர். இளைஞர்களில் பல
மதத்தினர், கடவுள் மறுப்பு கருத்து கொண்டவரும் இருந்தனர். அன்றைய விவாதம்
மிகவும் அருமையாக இருந்தது.

ஐந்தாவது  சந்திப்பு யாராலும் மறக்க முடியாதது. புத்தாண்டு கொண்டாட
புதிய வழி. யாஹூ சாட்டில் எனக்கு நிறைய நண்பர்கள் உலக அளவில் சேர்ந்து
விட்டனர். அவர்கள் வெளி நாட்டில் இருந்தனர். அவர்களுக்கு நான் 19 வயதுப்
பெண். 2001 டிசம்பர் இரவு 11 மணிக்கு சாட்டிற்கு அவர்கள் வர வேண்டும்
என்று சொல்லி இருந்தேன். சென்னை வாசிகளுக்கு இந்த ஏற்பாடு
பிடித்திருந்தது. என் வயதைக் கூறக் கூடாது என்று முதலிலேயே
சொல்லிவிட்டேன். என் உறவினர்கள், சில குடும்ப நண்பர்கள் குடும்பமாக
வந்திருந்தனர். அன்று உணவிற்கும் ஏற்பாடு செய்திருந்தேன்.

சரியாக இரவு 11 மணிக்கு யாஹூ அரட்டை அறைக்கு
நுழைந்தோம். வம்ஸி தான் பொறுப்பு. என்னை விசாரிக்கவும் அவன் சொன்ன பதில்
இப்பொழுதும் நினைக்கும் பொழுது சிரிப்பை வரவழைக்கின்றது
“மச்சி, அவ என் தங்கச்சிதான். ஒரே வெட்கம் இங்கே பக்கத்தில் குந்திகிட்டு
வேடிக்கை பாக்கறா. நீ நல்லா பாடுவியாமே. பாடு.
உன் பாட்டைக் கேட்க ஓடோடி வந்துருக்கோம் ஏமாத்தாதே மச்சி”
வம்ஸியின் பேச்சில் மயங்கி பாட ஆரம்பித்து விட்டான். அவ்வளவுதான்
ஒவ்வொருவராகப் பாட ஆரம்பித்தனர், புனிதமும் பாடினார்கள். அரட்டைக்கு
வந்தவர்களும் உற்சாகமாகப் பாடினர். வம்ஸி தன் நண்பர்களுடன் கானா பாட்டு
பாடினான்.

புது வருடம் பிறக்கும் பொழுது உலக அளவில் வாழ்த்து தெரிவித்து கொண்டு
கத்தினோம். இன்றும் யாரும் அந்த சம்பவத்தை மறக்கவில்லை. மனத்தில் பதிந்த
ஓர் அற்புதமான நிகழ்வு

ஆறாவது கூட்டத்திற்கு பல துறைகளிலிருந்து அழைக்கப்பட்டு வந்திருந்தனர்.
மறைந்த திருமதி சத்தியவாணிமுத்துவின் மகள் சித்ரா
அரசியல் சார்பில் வந்திருந்தார். மேடைப் பேச்சாளர். திராவிட மூன்னேற்றக்
கட்சியில் மகளிர் அணியில் இருப்பவர். வந்திருந்த அனைவரும் ஏதாவது பணியிலோ
அல்லது சொந்தத் தொழிலோ
செய்பவர்கள். அன்று நடந்த விவாதங்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தன. ஜான்,
மாத்யூ  இருவரைத் தவிர யாரும் இன்னும் பணியில்
சேராதவர்கள்.

ஏழாவது கூட்டம் சோகமானது. காரணம் அதுவே அவர்களுக்குக் கடைசிக் கூட்டம்.
நான் மார்ச் மாதம் அமெரிக்கா புறப்பட்டுவிட்டேன்

இளைஞர்கள் பழக்கம் வெறும் சந்திப்புதானா? இல்லவே இல்லை.
பதவி ஓய்வு பெற்றபின் வெளி உலகத்திலிருந்து தள்ளி இருக்க வேண்டிய நிலை.
மாறியிருக்கும் காலத்தை எனக்குக் காட்டியவர்கள் இவர்கள். அதிர்ச்சிகளும்
அதிசயங்களும் உணர்ந்தேன். அவர்களும் பாசத்துடன் அம்மா வென்றோ ஆன்டி என்று
அழைத்தினர். பலர் தங்கள் பிரச்சனை களைக் கூறினர்.. என்னால்
முடிந்தமட்டும் தீர்த்து வைத்தேன் இவர்களில் சிலர் அவ்வப்பொழுது
வீட்டிற்கு வந்து பார்த்துச் செல்வார்கள்

ராஜா என்றோ வருபவன் இல்லை. வீட்டின் மாடியில் குடியிருப்பவன்.
ஆசானாய் வந்தவன் நண்பனானான். பல நாட்கலில் இரவு 12 மணி வரை பேசிக்
கொண்டிருப்போம். நிறைய தமிழ்க் கதைகள் படிப்பான். நல்ல சிந்தனை.
எங்களுடைய அலசல்கள் பல கோணங்களில் இருக்கும்.

வேலையிலிருந்து திரும்பும் ஈஸா முதலில் என்னைப் பார்த்துவிட்டுத்தான் தன்
அறைக்குச் செல்வான். என் முகம் வாடியிருந்தால் கதவைத் திறக்கச் சொல்லி
உள்ளே வந்து உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசிவிட்டே செல்வான்.

ஷேக் கொஞ்சம் ஒதுங்கி இருப்பான் ஆனாலும் பாசமுள்ளவன். ஒருநாள்
திடீரென்று ஒரு பொட்டலம் கொண்டு வந்து கொடுத்தான். திறந்து பார்த்தால்
இரண்டு உளுந்து வடை. அவன் சாப்பிடும் பொழுது ருசியாக இருக்கவும் என்
நினைவு வந்ததாம். அதனால் வாங்கி வந்தானாம்

இவர்களில் நயினாதான் வித்தியாசமானவன். அறையைச் சுத்தமாக வைக்கும் வேலைகளை
இவன்தான் செய்வான். இன்னும் ஒழுங்கான வேலை கிடைக்கவில்லை. ஆனால் தினமும்
காலையில் குளித்துவிட்டு குறிப்பிட்ட நேரத்தில் வெளியில் சென்று
விடுவான். ஒரு நாள் அவனை “எங்கே காலையில் தினமும் போகின்றாய்? என்று
கேட்டேன். அவன் சொன்ன பதிலில் அதிர்ந்து போனேன்
“பாட்டி, தினமும் புரசவாக்கம் பஸ் ஸ்டாண்டிற்குத்தான் போறேன். காலேஜுக்கு
அப்பொத்தான் பொண்ணுங்க வந்து பஸ் ஏறுவாங்க.
அவங்களை வேடிக்கை பாக்கத்தான் போறேண் “

நான் சிரித்து கொண்டேன். என் வயதில் மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள்?
“ஏண்டா ஒழுங்கா வேலை தேடத் தெரியல்லே. இப்படி பொண்ணுங்க பின்னாலே
சுத்தினா உருப்புடுவியா? “
இந்த வயது ரசிக்கும் வயது. எதை எதை எப்போ, எப்படி சொல்ல வேண்டும் என்பதை
பெரியவர்கள் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டிய காலம்.

நான் மட்டுமல்ல, புனிதமும் மாடிவீட்டுப் பையன்களுடன் ஒன்றிப்
பழகினார்கள். அந்த அறை சரியான பிரம்மச்சாரி அறை. அங்கே அவர்கள் சி..டி
வாங்கி கம்ப்யூட்டரில் போட்டு சினிமா பார்ப்பார்கள். சில சமயம் நாங்கள்
இருவரும் அங்கு போய் அந்த குப்பை மேட்டிலே உடகார்ந்து படம்
பார்த்திருக்கின்றோம்.

ராஜா எனக்கு எழுதிய கடித்தத்தில் என்னைப்பற்றி ஒரு மதிப்பீடு செய்து
எழுதியிருந்தான். ஓர் சின்னப் பகுதியைமட்டும் இங்கு காட்ட
விரும்புகின்றேன்

“நான் எழுத அமர்ந்துவிட்டேன். .. என்ன எழுதுவது.. ? இதயம் ஆராய்
கிறது. முதலில் என் நிலையை நான் தெளிவு படுத்த வேண்டும். நான் இப்போது
யார்?ஒரு பாசமிகு பாட்டிக்குப் பேரனா?ஒரு எழுத்தாளரின் வாசகனா?
விமர்சகனா? ஒரு அறிவு தோழியின் தோழனா  ?இல்லை ஒரு அறிவுபூர்வ அப்பாவிக்கு
ஆலோசகனா? இல்லை ஒரு மாணவியின் ஆசிரியனா?இல்லை, ஒரு ஆசிரியையின் மாணவனா?
முதலில் என் நிலையை நான் தெளிவு படுத்த வேண்டும்! எப்படி இது சாத்தியம் ?
இரு உயிர்களுக்கு மத்தியில் இத்தனை உறவுகளுக்கு எப்படி சாத்தியம்?
முடிந்ததே  ,, அப்படி இருக்க முடிந்ததே 1 ஒரு பாட்டியாக, ஒரு
இலக்கியவாதியாக, விமர்சகராக, மாணவியாக, ஆசிரியராக, ஆலோசகராக, அப்பாவியாக
ஒரு பாட்டி. .. , அதிலும் சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள ஒரு மூதாட்டி
என் வாழ்க்கைப்பயணத்தில் வருவார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. ..
ஆனால் வந்தார். அப்படி ஒரு பெண் அத்தனை உறவுகளையும் சுமந்து கொண்டு என்
வாழ்வில் வந்தார் ” பாட்டிக்கு பேரன் எழுதிய கடிதம்

தலைமுறை இடைவெளி எங்களிடையே நாங்கள் உணரவில்லை. இன்றும்
அவன் என் பேரன், என் தோழன், என் ஆசான்.

ஈசனுக்குக் குருவாய் அமரும் சண்முகன் நம் வாழ்க்கையிலும் உண்டு.

மாடிவீட்டுப் பையன்கள் அனைவரும் இப்பொழுது துபாயில் வேலை பார்க்கின்றனர்.
என் ஆசான் என்று குறிப்பிட்ட ராஜாக்கான் தான் இன்று
கீழை ராசா என்ற புனைபெயரில் துபாய் தமிழர்கள் மத்தியில்,
தமிழ் இலக்கியக் கூட்டங்களில் கவிதை பாடிக்கொண்டு, கதை பேசிக் கொண்டு
வலம் வருவதோடு, தமிழ்ப் பதிவர்கள் மத்தியில் சாருகேசி என்ற வலைப்பூவையும்
எழுதி வருகின்றான். நட்புக்கு ஓர் இலக்கணம். சிறந்த சிந்தனையாளன்.
அண்ணாச்சியின் அன்புத் தம்பி.

என் நினைவில்லத்தில் மணியனும் சாவியும் இருப்பதுபோல்தான் பெரிய
கருப்பனும் ராஜாவும் இருக்கின்றார்கள். அது சாதனையாளர் இல்லம் அல்ல.
அன்புக்குடில்.

அலைகள் இன்னும் வரும்


“Tamil in Digital Media” group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: