Skip to content

Fwd: மதுரை – வைரமுத்து (1997) – MP3 file

ஜூன் 28, 2011

 

அண்மையில் முனைவர் V. S. ராஜம் அம்மாள் கலிபோர்னியாவை விட்டு
சொந்த ஊர் மதுரைக்குச் சென்றுள்ளதாக மின்தமிழில் எழுதியிருந்தார்.
அவரது இளமைக்கால நினைவுகளில் இடம்பெற்றுள்ள  இடங்களைத்
தன் வலைமனையில் போட்டோக்கள் கொடுத்துக் குறித்துள்ளார்:

“மதுரையின் சுற்றுப்புறத் தெருக்களையும் பாருங்களேன்! “

 http://viruntu.blogspot.com/2011/04/blog-post_30.html 

மறுமொழியாக கவிஞர் வைரமுத்துவின் மதுரைப்பாட்டை
அனுப்பியிருந்தேன். பாடலைக் கேட்க பாடலாசிரியரின்
குரலில் எம்பி3 ஒலிக்கோப்பு இம்மடலுடன் இணைப்பு.

வாழ்க வளமுடன்,
நா. கணேசன்

                    மதுரை!
கவிஞர் வைரமுத்து (1997)

பாண்டியர் குதிரைக் குளம்படியும் – தூள்
     பறக்கும் இளைஞர் சிலம்படியும் – மதி
தோண்டிய புலவர் சொல்லடியும் – இளந்
    தோகைமார்தம் மெல்லடியும்
         மயங்கி ஒலித்த மாமதுரை – இது
         மாலையில் மல்லிகைப் பூமதுரை!

நீண்டு கிடக்கும் வீதிகளும் – வான்
     நிமிர்ந்து முட்டும் கோபுரமும்
ஆண்ட பரம்பரைச் சின்னங்களும் – தமிழ்
     அழுந்தப் பதிந்த சுவடுகளும்
        காணக் கிடைக்கும் பழமதுரை – தன்
        கட்டுக் கோப்பால் இளமதுரை!

மல்லிகை மௌவல் அரவிந்தம் – வாய்
      மலரும் கழுநீர் சுரபுன்னை
குல்லை வகுளம் குருக்கத்தி – இவை
      கொள்ளை அடித்த வையைநதி
          நாளும் ஓடிய நதிமதுரை – நீர்
          நாட்டிய மாடிய பதிமதுரை

தென்னவன் நீதி பிழைத்ததனால்
       தெரிந்து மரணம் அழைத்ததனால்
கண்ணகி திருகி எறிந்ததனால் – அவள்
       கந்தக முலையில் எரிந்ததனால்
            நீதிக் கஞ்சிய தொன்மதுரை – இன்று
            ஜாதிக் கஞ்சும் தென்மதுரை!

தமிழைக் குடித்த கடலோடு – நான்
       தழுவேன் என்றே சபதமிட்டே
அமிழ்தம் பரப்பும் வையைநதி – நீர்
      ஆழி கலப்பது தவிர்ப்பதனால்
          மானம் எழுதிய மாமதுரை – இது
          மரபுகள் மாறா வேல்மதுரை!

மதுரை தாமரைப் பூவென்றும் – அதன்
       மலர்ந்த இதழே தெருவென்றும்
இதழில் ஒட்டிய தாதுக்கள் – அவை
       எம்குடி மக்கள் திரளென்றும் – பரி
          பாடல் பாடிய பால்மதுரை – வட
          மதுரா புரியினும் மேல்மதுரை!

மீசை வளர்த்த பாண்டியரும் – பின்
      களப்பிரர் பல்லவர் சோழர்களும் – மண்
ஆசை வளர்த்த அந்நியரும் – அந்த
      அந்நிய ரில்சில கண்ணியரும்
          ஆட்சி புரிந்த தென்மதுரை – மீ
          னாட்சியி னால்இது பெண்மதுரை!

மண்ணைத் திருட வந்தவரைத் – தம்
      வயிற்றுப் பசிக்கு வந்தவரை – செம்
பொன்னைத் திருட வந்தவரை – ஊர்
      பொசுக்கிப் போக வந்தவரைத் – தன்
          சேயாய் மாற்றிய தாய்மதுரை – அவர்
          தாயாய் வணங்கிய தூய்மதுரை!

அரபு நாட்டுச் சுண்ணாம்பில் – கரும்பு
      அரைத்துப் பிழிந்த சாறூற்றி
மரபுக் கவிதை படைத்தல்போல் – ஒரு
       மண்டபம் திருமலை கட்டியதால்
           கண்கள் மயங்கும் கலைமதுரை – இது
           கவிதைத் தமிழின் தலைமதுரை!

வையைக் கரையின் சோலைகளும் – அங்கு
      வரிக்குயில் பாடிய பாடல்களும்
மெய்யைச் சொல்லிய புலவர்களும் – தம்
      மேனி கறுத்த மறவர்களும்
           மிச்ச மிருக்கும் தொன்மதுரை – தமிழ்
           மெச்சி முடிக்கும் தென்மதுரை!

போட்டி வளர்க்கும் மன்றங்களும் – எழும்
         பூசை மணிகளின் ஓசைகளும் – இசை
நீட்டி முழங்கும் பேச்சொலியும் – நெஞ்சை
         நிறுத்திப் போகும் வளையொலியும்
             தொடர்ந்து கேட்கும் எழில்மதுரை – கண்
             தூங்கா திருக்கும் தொழில்மதுரை!

ஆலைகள் தொழில்கள் புதுக்காமல் – வெறும்
         அரசியல் திரைப்படம் பெருக்கியதில்
வேலைகள் இல்லாத் திருக்கூட்டம் – தினம்
         வெட்டிப் பேச்சு வளர்ப்பதனால்
             பட்டாக் கத்திகள் சூழ்மதுரை – இன்று
             பட்டப் பகலில் பாழ்மதுரை!

நெஞ்சு வறண்டு போனதனால் – வையை
       நேர்கோ டாக ஆனதனால்
பஞ்சம் பிழைக்க வந்தோர்கள் – நதியைப்
       பட்டாப் போட்டுக் கொண்டதனால்
            முகத்தை இழந்த முதுமதுரை – பழைய
            மூச்சில் வாழும் பதிமதுரை!

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: